அறிவிப்பாளர்: ஸஃதுபின் அபீவக்காஸ்(ரலி)நான் நோய்வாய்ப் பட்டிருந்தேன். நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் என்னை நலம் விசாரிக்க வருகை தந்தார்கள். நபியவர்கள் என்னிடம் ''நீர் வஸிய்யத் ஏதும் செய்திருக்கின் றீரா?'' என வினவினார்கள்.நான் ''ஆம்! செய்து வைத்திருக்கிறேன்!'' என பதிலளித்தேன். நபியவர்கள் ''எவ்வளவு, எப்படி செய்து வைத்துள்ளீர்?'' என்று கேட்டார்கள். ''என் செல்வம் முழுவதையும் இறைவழியில் செலவிட வேண்டும் என மரண சாஸனம் செய்துள்ளேன்!'' என்று கூறினேன்.நாயகம்(ஸல்) அவர்கள் ''உம் குழந்தைகளுக்கு என்ன விட்டு வைத்தீர்?'' என்ற வினவினார்கள்.''அவர்கள் செல்வந்தர் களாக நல்ல நிலையில் உள்ளனர்'' என்று நான் பதில் அளித்தேன். அதற்கு நபியவர்கள், ''இல்லை. உம் சொத்தில் பத்திலொரு பங்கை இறைவழியில்(செலவிடுவதற்காக) வஸிய்யத் செய்யும்!'' என்று கூறினார்கள்.நான் ''நாயகமே! இது மிகவும் குறைவு. இறைவழியில் செலவிடுவதற்காக இன்னும் சிறிது அதிகமாக வஸிய்யத் செய்ய என்னை அனுமதியுங்கள்!'' என்று கோரிய வண்ணமிருந்தேன்.இறுதியில் ''சரி, உம் செல்வத்தில் மூன்றிலொரு பங்கை இறைவழியில் செலவிடுவதற்காக வஸிய்யத் செய்யும். இதுவே அதிகம்'' என்று நபியவர்கள் நவின்றார்கள். (திர்மிதி)விளக்கம்: இந்த நபிமொழியிலிருந்து தெரியவருவது இதுதான்; மரணிப்பவர் தன் சொத்தில் மூன்றில் ஒரு பங்குவரை மரண சாஸனம் செய்ய முடியும். அதனை ஒரு கல்வி இல்லத்திற்கோ, தேவையுள்ள முஸ்லிமுக்கோ கொடுக்கும்படி வஸிய்யத் செய்ய அவருக்கு உரிமையுண்டு. ஆனால், அவ்வாறு செய்வதற்கு முன்பு தன் நெருங்கிய உறவினர்களுக்கு தம் சொத்தில் பங்கு கிடைக்கின்றதா, இல்லையா என்றும் மேலும் அவர்களது நிலை என்னவென்றும் கவனிக்க வேண்டும். உறவினர்களில் ஒருவர் இருக்கிறார்; அவருக்கு சொத்தில் சட்டரீதியாக பங்கு கிடைப்பதில்லை; மேலும் அவர் குழந்தை குட்டிகளுடனும் இருக்கிறார். அத்துடன் அவரது பொருளாதார நிலையும் செழிப்பானதாக இல்லையென்றால், அத்தகைய உறவினருக்காக பங்கு கிடைக்கும்படி வஸிய்யத் செய்வதே அதிக புண்ணியத்தை ஈட்டித் தரக்கூடியதாக இருக்கும்.
0 Response to "சொத்தில் பங்கு கொடுக்கும் முறை"
கருத்துரையிடுக