அண்ணல் நபி(ஸல்) அவர்கள் ஒருநாள் "குத்பா' உரையாற்றினார்கள். அதில் சில முஸ்லிம்களைப் புகழ்ந்தார்கள். பிறகு கூறினார்கள்:
""சிலர் தம் அண்டை வீட்டாருக்கு மார்க்க அறிவைக் கற்பிப்பதில்லை. அவர்களுக்கு மார்க்க போதனையும் புரிவதில்லை. மார்க்கத்தை அறியாதிருப்பதால் விளையும் தீய விளைவுகளை எடுத்துச் சொல்வதுமில்லை; அவர்களைத் தீய செயல்களை விட்டுத் தடுப்பதுமில்லை. ஏன் இந்த நிலை?
சிலர் தம் அண்டை வீட்டாரிடமிருந்து மார்க்கத்தைக் கற்றுக் கொள்வதில்லை; மார்க்க அறிவை நம்முள் உண்டாக்கிக் கொள்வதுமில்லை; மார்க்கத்தை அறியாதிருப்பதால் ஏற்படும் தீயவிளைவுகளை அறிந்து கொள்வதுமில்லை. ஏன் இந்த நிலை?
இறைவன் மீது ஆணையாக! மக்கள் தம் அண்டை வீட்டாருக்கு அவசியம் மார்க்கத்தைப் போதிக்க வேண்டும். அவர்களுக்கு அறிவுரைகள் கூற வேண்டும். நல்ல விஷயங்களை எடுத்துரைக்க வேண்டும். தீயவற்றிலிருந்து தடுக்க வேண்டும். மேலும் மக்கள் தம் அண்டை வீட்டாரிடமிருந்து மார்க்கத்தைக் கற்க வேண்டும். அவர் களுடைய அறிவுரைகளை ஏற்க வேண்டும். இல்லையென் றால் நான் அவர்களுக்கு வெகு விரைவில் தண்டனை அளிப்பேன்.''
இந்த உரையின் செய்தி அஷ்அரீ குலத்தாருக்கு எட்டியவுடன் அவர்கள் அண்ணலாரிடம் வந்தனர். ""அல்லாஹ்வின் தூதரே! தாங்கள் தங்கள் உரையில் சிலரைப் புகழ்ந்தீர்கள். எங்கள் மீது கோபப்பட்டீர்கள். நாங்கள் என்ன தவறிழைத்தோம்?'' என்று கேட்டார்கள். அண்ணலார் கூறினார்கள்: ""மக்கள் தம் அண்டை வீட்டாருக்கு அவசியம் மார்க்க அறிவைப் புகட்ட வேண்டும். அவர்களுக்கு அறிவுரை கூற வேண்டும். நற்செயல்கள் புரியும் படி அவர்களை ஏவுதல் வேண்டும். தீய விஷயங்களை விட்டுத் தடுக்க வேண்டும். இவ்வாறே மக்கள் தம் அண்டை வீட்டாரிடமிருந்து மார்க்கத்தைக் கற்க வேண்டும். அவர்களுடைய அறிவுரையை ஏற்க வேண்டும். நமக்குள் மார்க்க அறிவை உண்டாக்கிக் கொள்ள வேண்டும். இல்லையெனில் நான் அவர்களுக்கு வெகு விரைவில் இவ்வுலகிலேயே தண்டனை அளிப்பேன்.''
அதற்கு அஷ்அரீ குலத்தார் கூறினார்கள்: ""அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் பிறருக் குள்ளும் மார்க்க அறிவை உண்டாக்க வேண்டுமா?'' (அறிவுரை புரிவதும், அழைப்புப் பணி செய்வதும் எங்கள் கடமையா?) என்று கேட்டார்கள். அதற்கு அண்ணலார், ""ஆம்; இதுவும் உங்கள் பொறுப்பேயாகும்,'' என்று நவின்றார்கள். உடனே, அம்மக்கள் ""எங்களுக்கு ஓராண்டு காலம் அவகாசம் கொடுங்கள்'' என்று கூறினார்கள். ஒராண்டுக்குள் அவர்கள் தம் அண்டைச் சமுதாயத்தவருக்கு மார்க்க அறிவை உண்டாக்கிட வேண்டும். மார்க்க சட்டங்களைப் போதிக்க வேண்டும் என்னும் நிபந்தனையுடன் ஓராண்டுக்கால அவகாசத்தை அவர்களுக்கு அண்ணலார் அளித்தார்கள். இதன் பிறகு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் "லஇன்னல்லஸீன கஃபரூமின் பனீஇஸ்ராயீல'' என்று தொடங்கும் இறைவசனத்தை ஓதினார்கள்.
ஐந்தாவது அத்தியாயமான அல்மாயிதாவிலுள்ள அந்த வசனத்தின் பொருளாவது: ""இஸணராயீலின் வழித்தோன்றலில் எவர்கள் நிராகரித்தார்களோ, அவர்கள் தாவூது மற்றும் மரியத்தின் குமாரர் ஈஸா ஆகியோரின் நாவினால் சபிக்கப்பட்டார்கள். ஏனெனில் அவர்கள் (இறைக்கட்டளைக்கு) மாறு செய்தார்கள். மேலும் இறை வரம்புகளை மீறிய வண்ணம் இருந்தார்கள். தாம் செய்து கொண்டிருந்த தீய செயலில் இருந்து அவர்கள் ஒருவரையொருவர் தடுக்காமல் இருந்தார்கள். இவ்வாறு அவர்கள் செய்து கொண்டிருந்த செயல்கள் யாவும் மிகவும் தரங்கெட்டவையாய் இருந்தன.''(5:78) (தப்ரானீ)
-அண்ணல் நபிகளார் வாழ்வினிலே... நூலில் இருந்து
அறிவிப்பாளர்: அபூஸயீத் அல்குத்ரீ(ரலி)
நான் அண்ணல் நபி(ஸல்) அவர்கள் நவிலக் கேட்டேன்: ""இறைநம்பிக்கையாளனின் வேட்டி (கீழங்கி: கால்சட்டை) அவனது கெண்டைக்காலில் பாதிவரை இருக்கும். அதனைவிடக் கீழேயும் கணுக்கால்களுக்கு மேலேயும் இருந்தால் அதனால் பாவம் ஏதுமில்லை. இன்னும் அதனைவிடக் கீழே இருப்பது நரகத்திற்குரியதாகும். (அதாவது அது பாவகரமான ஒரு செயல்) இதனை(இந்தக் கடைசி வாக்கியத்தை மக்களுக்கு இதன் முக்கியத்துவம் தெளிவாகி விடட்டும் என்பதற்காக) அண்ணலார் மூன்றுமுறை கூறினார்கள். பிறகு ""அகந்தையுணர்வினால் தன் கீழங்கியைப் பூமியில் இழுத்த வண்ணம் நடக்கும் மனிதனை இறைவன் மறுமைநாளில் ஏறிட்டும் பார்க்க மாட்டான்'' என்று அண்ணலார் கூறினார்கள். (அபூதாவூத்)
அறிவிப்பாளர்: இப்னு உமர் (ரலி)
அண்ணல் நபி(ஸல்) அவர்கள் அருளினார்கள்:
""எவன் தன் கால்சட்டையை கர்வத்துடன்
பூமியில் இழுத்துச் செல்கின்றானோ அவனை அல்லாஹ் மறுமைநாளில் ஏறெடுத்தும் பார்க்கமாட்டான். (கருணைப் பார்வை பார்க்க மாட்டான்)''
அபூபக்கர் ஸித்தீக்(ரலி) அவர்கள் வினவினார்கள்:
""நான் பிடித்து வைத்த வண்ணம் இருக்காவிட்டால் என் வேட்டி தளர்ந்து கணுக்கால்களுக்குக் கீழே போய்விடுகின்றது. (நானும் என் இறைவனின் கருணைப் பார்வையை இழந்து விடுவேனோ?)'' அதற்கு அண்ணலார், ""இல்லை; நீர் கர்வத்தால் வேட்டியை இழுத்துச் செல்பவரல்லர். (எனவே, இறைவனின் அருட்பார்வையை நீர் இழக்க மாட்டீர்)'' என்று பதிலளித்தார்கள்.
(புகாரி)
விளக்கம்: அபூபக்கர் ஸித்தீக்(ரலி) அவர்கள் வேட்டி தளர்ந்து போனதற்கு காரணம் அவர்களுக்குத் தொப்பை போட்டிருந்தது என்பதன்று. மாறாக அவர்கள் ஒல்லியாக இருந்தது தான் இதற்குக் காரணம். ""கர்வத்தினாலும் பெருமையுணர்வினாலும் கணுக்கால்களை மறைக்கும் வண்ணம் வேட்டியணிந்து நடப்பவனே இறைவனின் கருணைப்பார்வையை இழந்து விடுவான்'' என்றுதான் அண்ணலார் நவின்றார்கள். இந்த அருள்மொழி முழுவதையும் அபூபக்கர்(ரலி) அவர்கள் செவியுற்றார்கள். தற்பெருமையினால் வேண்டுமென்றே தாம் அவ்வாறு செய்யவில்லை என்பதையும் அவர்கள் அறிந்தேயிருந்தார்கள். ஆயினும், ஒரு மனிதனை மறுமை பற்றிய கவலை கவ்விக் கொள்ளும்போது, பாவத்தின் நிழல்களைக் கண்டாலும் கூட அவற்றை விட்டு அவர் விலகி ஓடுகிறார்.
(அண்ணல் நபிகளார் வாழ்வினிலே... நூலில் இருந்து)
அப்துஸ்ஸலாம் மஸ்தூக்கா
உலகில் பிறந்த ஒவ்வொருவரும் ஏதேனும் ஒரு விதத்தில் பிறருக்குக் கடன் பட்டிருக்கின்றனர். வாழ்நாள் முழுவதும் பாடுபட்டாலும் தீராத கடன், பத்து மாதம் சுமந்து, படாத பாடுபட்டு நம்மைப் பெற்றெடுத்த நம் தாயிடம் நாம் பட்ட கடன். கண்ணை இமை காப்பது போல் மழலைப் பருவத்தில் காத்து வளர்த்து நம்மை அவர் ஆளாக்கிய கடன். குடும்பத்தைக் காப்பாற்ற, குழந்தைகளை வளர்க்கப் பாடுபட்டு உழைத்த தந்தையின் கடன்.இது போக அறிவைப் புகட்டிய ஆசிரியர் கடன், உள்ளத்தில் இடம் பெற்ற உடன் பிறந்தோர் கடன், நம்மையே நாடி வந்து நமக்காகத் தம்மையே அர்ப்பணித்த மனைவியின் கடன், நல்லொழுக்கத்தாலும், நன்னடத்தையாலும், நானிலம் போற்ற வாழ்ந்து பெற்றோருக்குப் பெருமை சேர்த்த பிள்ளைகள் கடன், ஆபத்து சமயங்களில் உதவி அனைத்து நேரங்களிலும் ஆறுதலாக இருந்த நண்பர்கள் கடன், இப்படி இந்தக் கடன் பட்டியல் நீண்டுக் கொண்டே போனாலும், இங்கே நாம் குறிப்பிடுவது ஒருவருக் கொருவர் உதவும் பொருளாதாரக் கொடுக்கல் வாங்கலின் போது ஏற்படும் கடனைப் பற்றி.
நாட்டை வளப்படுத்த அரசாங்கமே கடன் வாங்குகிறது. பெரும் தொழிலதிபர்களான செல்வந்தர்கள் கூடத் தம் தொழிலை விரிவு படுத்தக் கடன் வாங்குகின்றனர். அப்படியிருக்க தனி மனிதன் தம் தேவைகளுக்காகக் கடன் வாங்குவது தவறில்லை.வட்டியை அடிப்படையாகக் கொண்ட கடனை இஸ்லாம் வன்மையாகக் கண்டிக்கிறது. ஆனால் மனிதாபிமான அடிப்படையில் ஒருவருக் கொருவர் கடன் பெறுவதையும் தருவதையும் இஸ்லாம் தடை செய்ய வில்லை. கடன் கொடுக்கல் வாங்கலின் போது முறையாக எழுதி வைத்துக் கொள்ளும்படியும், தகுந்த சாட்சிகளை ஏற்படுத்திக் கொள்ளும்படியும் திருமறை குர்ஆனின் 2:282 வசனம் எடுத்தியம்புகிறது.
நபிகள் பெருமானார் (ஸல்) அவர்கள் ஒரு யூதரிடம் தம் கேடயத்தை அடமானம் வைத்துக் கோதுமையைக் கடனாகப் பெற்றதாக ஆதாரப்பூர்வமான நபி மொழி நமக்கு அறிவிக்கிறது.
பரஸ்பரம் ஒருவருக் கொருவர் கடன் கொடுத்து உதவுவது அன்பை அதிகப் படுத்தும். கடன் வாங்குவது மட்டுமே குறிக்கோளாக இல்லாமல் அடுத்தவருக்குத் தேவைப் படும்போது கொடுத்து உதவவும் மனம் வரவேண்டும். அப்போது தான் நமக்குத் தேவை ஏற்படும் போது பிறரிடம் கேட்கவும் முடியும்.
'கடன் கிடைக்கிறது என்பதற்காக வாங்காதே! 'தேவைப்படுகிறது' என்பதற்காக வாங்கு' என்பது ஓர் அறிஞரின் கூற்று. ஆம்! ஒருவர் நம்மிடம் 'பணம் தேவைப்பட்டால் கேளுங்கள்' என்று சொல்வதாக வைத்துக் கொள்வோம். உடனேயே அவரிடம் 'சரி தாருங்கள்' எனக் கேட்கக் கூடாது. உண்மையிலேயே நமக்கு அவசியம் ஏற்பட்டால் மட்டுமே வாங்க வேண்டும்.
நமக்குக் கடன் கொடுத்து உதவ பலர் தயாராக இருக்கிறார்கள் என்றால் அவர்களிடம் நாம் நற்பெயர் எடுத்திருக்கிறோம் என்று பொருள்.அந்த நற்பெயரை முடிந்த வரைக் கட்டிக் காப்பாற்ற வேண்டும். இது வரை வாங்கிய கடன்களை ஒழுங்காக நாம் திருப்பிச் செலுத்தியிருந்தால் மட்டுமே இப்படி ஒரு நற்பெயர் நமக்குக் கிடைக்கும். இந்த நற்சான்றிதழுக்கு நாம் தகுதியானவர் தானா என்பதை, கடந்த காலங்களில் நாம் வாங்கிய கடனை முறையாக உரிய நேரத்தில் ஒழுங்காக நாம் திருப்பிக் கொடுத்திருக்கிறோமா என்பதை வைத்து நாம் தான் முடிவு செய்துக் கொள்ள வேண்டும்.
'இவர் மிகவும் நல்லவர், ஆனால் கடன் வாங்கினால் மட்டும் சீக்கிரம் தரமாட்டார்' என்று ஒருவரைப் பற்றி சிலர் கூறுவதுண்டு. இந்த விமர்சனம் அர்த்தமற்றது. இது அவரைப் பற்றிய புகழ்ச்சியா? அல்லது இகழ்ச்சியா? என்பது புரியவில்லை. வாங்கிய கடனை உரிய நேரத்தில் திருப்பித் தராதவர் எப்படி நல்லவராக இருக்க முடியும்?
கடன் வாங்கிய ஒருவர் சந்தர்ப்ப சூழ்நிலையால் திருப்பித் தர இயலாமற் போவதுண்டு. ஆனால் அப்படி ஒரு அசாதாரண சூழ்நிலை ஏற்பட்ட நபர் இப்படி விமர்சிக்கப் படுவதில்லை. வாங்கிய கடனை ஒழுங்காகத் திருப்பித் தருவதில்லை என்பதை வாடிக்கையாகக் கொண்டவர் தான் இப்படி விமர்சிக்கப் படுகிறார் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
'ஒருவரை நல்லவர் என்று சொல்ல வேண்டுமானால், அவர் அண்டை வீட்டுக் காரராக இருக்க வேண்டும், அல்லது நீண்ட தூரம் அவருடன் பயணம் செய்திருக்க வேண்டும், அல்லது அவருடன் கொடுக்கல் வாங்கல் செய்திருக்க வேண்டும்' என்னும் ஒரு பேரறிஞரின் கூற்று மிகவும் சிந்திக்கத் தக்கதாகும். இந்த மூன்று நிலைகளிலும் ஒருவரின் சுயரூபம் ஒரு நேரம் இல்லாவிட்டாலும் ஒரு நேரம் வெளிப்பட்டு விடும்.
எதிர்பாராத ஒரு செலவு ஏற்படுகிறது. கையில் அறவே பணம் இல்லை. யாரிடமாவது கடன் வாங்கலாம். ஆனால் கடன் வாங்கி இதைச் செலவை செய்யத்தான் வேண்டுமா? என்று ஒன்றுக்குப் பலமுறை நன்றாகச் சிந்திக்க வேண்டும். தவிர்க்கவே முடியாது என்கிற சூழ்நிலை ஏற்படும் போது மட்டுமே கடைசி ஆயுதமாகக் கடனைப் பயன்படுத்திக் கொள்ளலாம் தவறில்லை.
பொதுவாகவே சிக்கனமாகச் செலவு செய்பவர்களுக்கு கடன் பிரச்சினை ஏற்படுவதில்லை. ஊதாரித்தனமான செலவுகளால் தான் பெரும்பாலானோர் கடனாளி ஆகின்றனர். தேவையற்ற செலவுகளைக் குறைத்தாலே கடன் இல்லாமல் வாழலாம். அபூர்வமாகத் தான் அவசிய செலவுகளுக்கு கடன் வாங்க நேரிடும். கடன் வாங்கி பிரியானி சாப்பிடுவதை விட கடன் வாங்காமல் கஞ்சி குடித்தாலும் அந்தப் பொழுது போய்விடும். கஞ்சி குடிப்பதற்கும் வழியில்லாத போது கடன் வாங்குவது குற்றமில்லை.
ஒருவரிடம் கடன் கேட்கும் நிர்ப்பந்தம் ஏற்படும் போது நமது தேவையையும் நிலையையும் சொல்லி கடன் கேட்க வேண்டும். திருப்பித் தரும் காலக் கெடுவையும் சொல்ல வேண்டும். சொன்ன காலக் கெடுவுக்குள் கடனை திருப்பிக் கொடுக்கவும் வேண்டும்.
நமக்குக் கடன் கொடுத்தவருக்கு எதிர்பாராத அவசரத் தேவை ஏற்பட்டு அவர் சிரமப் படுகிறார் என்பது நமக்குத் தெரிய வந்தால், எந்த வகையிலாவது ஒரு மாற்று ஏற்பாடு செய்து, அவர் கேட்பதற்கு முன்பே, அவரிடம் நாம் வாங்கிய கடனை தவணைக்கு முன்னரே கொடுக்க முயற்சிக்க வேண்டும். நாம் சொன்ன கெடு தான் இன்னும் இருக்கிறதே என்று அலட்சியமாக இருக்கக் கூடாது. அவர் நிலைமையை உணர்ந்து கெடுவுக்கு முன்னரே திருப்பிக் கொடுப்பது, நமக்கு உதவி செய்தவருக்கு நாம் செய்யும் நன்றிக் கடன்.
வாங்கிய கடனை சந்தர்ப்ப சூழ்நிலையால் குறிப்பிட்ட காலத் தவணையில் கொடுக்க இயலாத நிலை ஏற்பட்டு விடுமானால், கடன் கொடுத்தவரை நேரில் சந்தித்து நமது இயலாமையை எடுத்துச் சொல்லி இன்னும் கொஞ்சம் கால அவகாசம் கேட்கலாம். எக்காரணம் கொண்டும் சம்பந்தப் பட்டவரை சந்திப்பதைத் தவிர்த்து ஓடி ஒளியக்கூடாது. அது கடன் கொடுத்தவருக்கு மேலும் கோபத்தை ஏற்படுத்தும். நேரில் சந்தித்து ஆறுதலான வார்த்தைகள் சொன்னால் அவர் மனம் குளிரும். இன்னும் கொஞ்சம் கால அவகாசம் கிடைக்கும். இடைப்பட்ட காலத்திலாவது எப்படியும் கடனைத் திருப்பிக் கொடுக்க முயற்சிக்க வேண்டும்.மனம் குளிரப் பேசி மேலும் மேலும் தவணை கேட்பதையே வழக்கமாக்கிக் கொள்ளக் கூடாது.
சிலர் கடன் வாங்கும் போது இனிக்க இனிக்கப் பேசுவார்கள். கொடுத்த கடனைத் திருப்பிக் கேட்டால் கோபம் பொத்துக் கொண்டு வரும். கொடுத்த கடனைக் கேட்டால் கோபப்படுகிறவர்கள் மனித இனத்தின் நச்சுப் பாம்புகள். 'கொடுத்ததைக் கேட்டால் அடுத்தது பகை' என்று முன்னோர்கள் சரியாகத் தான் சொன்னார்கள்.
ஒருவர் பணம் வைத்திருப்பது நமக்குத் தெரியும், நமக்குத் தெரியும் என்பது அவருக்குத் தெரியும் என்றால் அப்படிப்பட்ட சூழ் நிலையில் அவரிடம் கடன் கேட்பதைத் தவிர்க்க வேண்டும். தவிர்க்கவே முடியாத சூழ்நிலையில் அவரிடம் கேட்டு அவர் 'இல்லை' என்று சொன்னால் அதற்காக அவர் மீது வருத்தப்படக் கூடாது. அவருக்கு வேறு ஏதேனும் செலவுகள் இருக்கலாம் அல்லது நமக்கு கடன் கொடுத்தால் ஒழுங்காகத் திருப்பிக் கிடைக்காது என அவர் கருதியிருக்கலாம். அவருடன் ஏற்கனவே நாம் கொடுக்கல் வாங்கல் செய்த போது நாம் நாணயத்துடன் நடந்துக் கொண்டோமா என்பதை நினைவு படுத்திப் பார்க்க வேண்டும்.
சிலரிடம் கொடுத்த கடனைக் கேட்டால், கேட்கும் போதெல்லாம் 'ஆம்! நான் உங்களுக்குத் தரவேண்டும் என்பது உண்மை தான், இல்லை என்று சொல்ல வில்லை, ஆனால் இப்போது என்னிடம் பணம் இல்லையே! கிடைக்கட்டும் தருகிறேன்' என்று வாரக் கணக்கில் மாதக் கணக்கில் சொல்லிக் கொண்டிருப்பார்கள். 'தரமுடியாது' என்று சொல்வதற்கும் இதற்கும் பெரிய வித்தியாசம் எதுவும் இல்லை. மாதக் கணக்கில் அவர்களிடம் பணம் வராமலா இருக்கிறது? அவர்கள் செலவு செய்யாமலா இருக்கிறார்கள்? அவர்களுடைய வழக்கமான ஆடம்பரச் செலவுகள் படு ஜோராய் நடந்துக் கொண்டு தானிருக்கும். வாங்கிய கடனைக் கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் மட்டும் அவர்கள் இதயத்தில் தோன்றுவதே இல்லை.
கை நீட்டிக் கடன் வாங்கி விட்டால் திருப்பிக் கொடுக்கும் வரை, கடன் கொடுத்தவரைக் கண்டால் வெட்கத்தால் கூனிக் குறுகிப் போகிறவர்களும் உண்டு. இவர்கள் சந்தர்ப்ப சூழ்நிலையால் தான் வாங்குகிறார்களே தவிர விரும்பி வாங்குகிறவர்கள் அல்ல. இப்படிப் பட்டவர்களை பேச்சிலும் நடத்தையிலும் அடையாளம் காண முடியும். இப்படிப் பட்டவர்களுக்குக் கடன் கொடுக்கலாம்.
மாதச் சம்பளம் பெறுவோர் சிலர் சம்பளம் வாங்கிய மறு நாளிலிருந்தே கடன் வாங்க ஆரம்பித்து விடுவார்கள். கடைக் காரர்களுக்கு வாடிக்கை யாளர்களைப் போல், கடன் வாங்குவதில் இவர்கள் வாடிக்கையாளர்கள். சம்பளம் வாங்கும் போது சரியாகத் திருப்பிக் கொடுத்தாலும், மறுபடியும் மறுபடியும் மாதாமாதம் கடன் வாங்கிக் கொண்டிருப்பார்கள். இவர்கள் ஒரு மாதம் மட்டும் தங்கள் செலவினங்களை மட்டுப்படுத்திக் கொண்டால் அடுத்த மாதம் முதல் கடன் வாங்காமல் தங்கள் சம்பளத்திலேயே காலம் கழிக்கலாம். அந்த அளவுக் கெல்லாம் இவர்கள் சிந்திப்பதில்லை. வாங்கும் சம்பளத்திற்கேற்ப இவர்களிடம் சரியானத் திட்டமிடுதல் இல்லை. வருமானத்தில் ஒரு பகுதியை அடுத்த மாத சம்பளம் வரை அன்றாடச் செலவினங்களுக்கு ஒதுக்கிக் கொண்டால், அநாவசியமாக அடுத்தவரிடம் கடன் கேட்டுக் கையேந்த வேண்டிய அவசியம் ஏற்படாது. எதிர்பாராமல் ஏற்படும் அவசரத் தேவைகளுக்கு மட்டும் கடன் வாங்கிக் கொள்ளலாம். இப்படித் திட்டமிட்டு செயல்படுபவர்களுக்கு அப்படிப்பட்ட 'எதிர்பாராதச்' செலவுகள் அபூர்வமாகவே ஏற்படும்.
கடைகளில் கணக்கு வைத்து காலமெல்லாம் கடன் வாங்கிக் கொண்டிருப்பவர்கள் பல வகைகளிலும் நஷ்டப்படுகிறார்கள் என்பதை அவர்கள் பெரும்பாலும் உணருவதில்லை. பணம் கொடுத்துப் பொருள் வாங்கும் போது பல இடங்களிலும் விசாரித்து, குறைந்த விலையில் பொருட்களை வாங்க முடியும். கடனுக்கு வாங்கும்போது விலை எல்லாம் விசாரித்துக் கொண்டிருக்க முடியாது.பணம் கொடுத்து பொருள் வாங்கும்போது தரமான பொருளைத் தேடிப்பார்த்து வாங்கலாம். கடனுக்கு வாங்கும்போது கிடைப்பதைத் தான் வாங்க வேண்டும். பணம் கொடுத்து பொருள் வாங்குபவர்களுக்குத் தான் முன்னுரிமை கிடைக்கும்.
கடனுக்கு வாங்குபவர்கள் தன்மானத்தைக் கூட சில சமயம் இழக்க வேண்டிவரும்.கடன் வாங்கிவிட்டு உரிய நேரத்தில் திருப்பிக் கொடுக்காத போது கடன் கொடுத்தவர் சில சமயம் கோபத்தில் ஏதாவது பேசி விடக் கூடும். இச்சமயத்தில் கடன் வாங்கியவர் பொறுமையைத் தான் கடைப் பிடிக்க வேண்டும். உரிய நேரத்தில் திருப்பிக் கொடுத்திருந்தால் அவர் தவறாகப் பேசியிருக்கமாட்டார் என்பதை உணர வேண்டும். நமது தேவைக்குக் கடன் கொடுத்து ஆபத்தான நேரத்தில் உதவிய அவரது நல்ல குணத்தை மட்டுமே நன்றியுடன் நினைத்துப் பார்க்க வேண்டும்.
நாம் ஒருவருக்குக் கடன் கொடுத்து, உண்மையிலேயே அவரால் உரிய நேரத்தில் திருப்பித் தரஇயலாத சூழ்நிலை இருப்பது நமக்குத் தெரியவந்தால், இயன்றவரை தவணையை நீட்டிப்பதும், அவர் தரும் வரை பொறுமை காப்பதும், மிகவும் நன்மையான காரியங்களாகும்.
கடன் வாங்குவதை இயன்றவரைத் தவிர்க்க வேண்டும். இயலாதபோது மட்டுமே கடன் வாங்க வேண்டும். இயன்றவரைக் குறைவாக வாங்க வேண்டும். அதையும் தவிர்க்க முடியுமானால் அதுவே சிறந்தது.
கடன் பட்டோனாய்க் காலையிலே
கண் விழிப்பதினும் மேலாகும்
உடன் பட்டிரவுப் பசியுடனே
உறங்கச் செல்லல் பொன் மொழியாம்
என்று கவிஞர் அப்துல் கபூர் அழகாகச் சொல்வார்.
கடனாளியாக ஒருவர் மரணித்தால் அவருடைய சொத்துக்களிலிருந்து முதலில் அவருடைய கடன்களை அடைத்த பிறகு தான் எஞ்சிய சொத்துக்களை வாரிசுகள் பங்கிட்டுக் கொள்ள வேண்டும் என்று இறைவனின் திருமறை எடுத்தியம்புகிறது.
அண்ணல் நபி (ஸல்) அவர்களிடம் இறந்தவர்களின் உடல் ஜனாஸா தொழவைப்பதற்காகக் கொண்டு வரப்படும் போது 'இறந்த இவருக்கு கடன்கள் இருக்கின்றனவா? என்றும் அப்படி கடன்கள் இருந்தால் கடன்களை அடைக்கும் அளவுக்கு சொத்துக்கள் எதுவும் இவர் விட்டுச் சென்றுள்ளாரா? என்றும் விசாரித்து அப்படி இருந்தால் தான் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் அந்த ஜனாஸாவுக்குத் தொழுகை நடத்துவார்கள், இல்லை யென்றால் 'உங்கள் சகோதரருக்கு நீங்களே தொழுகை நடத்துங்கள்' என்றும் கூறிவிடுவார்கள்.
மரணம் எந்த நேரமும் யாருக்கும் ஏற்படலாம். வாங்கிய கடனைப் பற்றி வாரிசு தாரர்களிடம் 'வஸிய்யத்' (மரண உபதேசம்) செய்து வைக்க வேண்டும். வாங்கிய கடன்களையும், கொடுத்த கடன்களையும் எழுதி வைத்துக் கொள்வதை வழக்காகக் கொள்ள வேண்டும். கடனாளியாக இறப்பதை விட்டும் பாதுகாக்கும்படி அடிக்கடி இறைவனிடம் பிரார்த்திக் வேண்டும்.
இயன்றவரை கடன் வாங்காதவர்களாக, இயலாத சூழ்நிiயில் வாங்க நேர்ந்து விட்டால் முறையாகத் திருப்பிக் கொடுப்பவர்களாக, அடுத்தவர்களுக்கு அவசரத் தேவைகள் ஏற்படும்போது கொடுத்து உதவுபவர்களாக, கடன் பெற்றவர் திருப்பித்தர இயலாத சிரமத்தில் இருப்பது தெரியவந்தால் இயன்றவரை பொறுமை காப்பவர்களாக, கடன் வாங்கியவர் இறந்து போய்விட்டால், அவரின் வாரிசுதாரர்கள் தரமுடியாத வறுமையில் இருக்கும் போது மனப்பூர்வமாக மன்னிப்பவர்களாக, இறைவன் நம்மை ஆக்கிவைக்க பிரார்த்திப்போமாக. அதற்கேற்ற வகையில் நம் வாழ்க்கையை அமைத்துக் கொள்வோமாக.
அப்துஸ் ஸலாம் மஸ்தூக்கா
அன்புடன்
நல்லூர் பீர்