அறிவிப்பாளர்: ஜாபிர்(ரலி)அண்ணல் நபி(ஸல்) கூறினார்கள்: ''அல்லாஹ்வுடைய திருவேதம் வாக்குகளில் மிகத் தூயதாகும். முஹம்மத்(ஸல்) அவர்கள் காட்டிய சீரியவழி ஏனைய வழிகளைக் காட்டிலும் மேலானதாகும்.''(முஸ்லிம்)அறிவிப்பாளர்: அனஸ்(ரலி)என்னிடம் அண்ணலார்(ஸல்) கூறினார்கள்: ''என் அன்பு மகனே! உன்னுள்ளத்தில் எவருக்கும் தீமை நாடாமல் உன்னால் வாழ முடியுமென்றால் அவ்விதமே நீ வாழ்!'' பின்னர் கூறினார்கள்: ''இது தான் எனது ஸுன்னத்(வழிமுறை) ஆகும். (என் உள்ளத்தில் எவரைக் குறித்தும் தீய எண்ணம் இல்லை) எவன் எனது ஸுன்னத்தை(வழிமுறையை) நேசிக்கின்றானோ அவன் என்னையே நேசித்தவனாவான். எவன் என்னை நேசித்தானோ அவன் சுவனத்தில் என்னுடன் இருப்பான்.''வள்ளல் நபி(ஸல்) அவர்களின் வணக்க வழிபாட்டு முறைகள் எவ்வாறிருந்தன என்பதைத் தெரிந்து கொள்ள அவர்களின் மனைவியரிடம் மூவர் வந்தனர். அவர்களுக்கு அது குறித்து விளக்கம் தரப்பட்டதும், அண்ணல் நபி(ஸல்) அவர்கள் செய்துவரும் (இபாதத்) இறைவழிபாடு மிகக் குறைவாக இருக்கின்றதே என்று நினைத்தனர். பிறகு பெருமானார்(ஸல்) அவர்களோடு நம்மை எப்படி ஒப்பிட முடியும்? அவர்கள் முன்பின் எப்போதும் பாவம் செய்யாதவர்களாயிற்றே! (ஆனால், நாமோ பாவம் செய்யாதோரல்லர்! எனவே, நாம் அதிகமதிகம் இறைவழிபாட்டில் ஈடுபட வேண்டும்) என்றெல்லாம் அவர்கள் மனதுக்குள் எண்ணிக் கொண்டனர். அந்த மூவரில் ஒருவர் பின்வருமாறு கூறினார்: ''இனி நான் இரவு நேரங்களில் உறங்கவே மாட்டேன்! இரவு முழுவதையும் நஃபிலான (கடமைக்கும் அதிகப்படியான) வணக்கங்களில் கழிக்கப் போகிறேன்''.இரண்டாமவரோ, ''நான் இனி இடைவிடாது நஃபிலான நோன்புகளை நோற்கப் போகிறேன். பகலில் ஒருபோதும் சாப்பிட மாட்டேன்!'' என்று கூறினார். மூன்றாமவர், ''நான் பெண்களை விட்டும் ஒதுங்கி இருக்கப் போகின்றேன். ஒரு காலமும் நான் திருமணமே செய்ய மாட்டேன்'' எனக் கூறினார். (இந்தச் செய்தி பெருமானார்(ஸல்) அவர்களுக்கு எட்டியதும்) நபியவர்கள் அத்தோழர்களிடம் சென்று ''இவ்வாறெல்லாம் கூறியவர்கள் நீங்கள்தாமா?'' என்று கேட்டுவிட்டு, தொடர்ந்து கூறினார்கள்: ''நிச்சயமாக நான் உங்களை விட அதிகமாக அல்லாஹ்வை அஞ்சக்கூடியவனாக இருக்கின்றேன். அவனுக்கு மாறு செய்வதைத் தவிர்த்துக் கொள்பவனாக இருக்கின்றேன். ஆயினும், பாருங்கள்; நான்(நஃபிலான) நோன்புகளை சிலசமயம் நோற்கின்றேன்! (இரவு நேரங்களில்) நஃபிலான தொழுகைகளையும் தொழுகின்றேன். தூங்கவும் செய்கின்றேன். இன்னும் பாருங்கள்! நான் பெண்களை மணம் முடித்தும் இருக்கின்றேன். (எனவே, எனது வழிமுறைகளைக் கடைப்பிடிப்பதில் தான் உங்களுக்கு நன்மையுண்டு) மேலும், எவருடைய கண்ணோட்டத்தில் என் ஸுன்னத்(வழிமுறை) பற்றிய கண்ணியம் இல்லையோ, எவர் எனது ஸுன்னத்(வழிமுறையை) அலட்சியப்படுத்துகின்றாரோ அவருக்கும் எனக்கும் எத்தகையத் தொடர்புமில்லை.''(முஸ்லிம்)அறிவிப்பாளர்: ஆயிஷா (ரலி)நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் ஒரு செயலைச் செய்வதிலிருந்து மக்களைத் தடுத்து விட்டிருந்தார்கள். பின்னர் அச்செயலைச் செய்திட இனி தாம் அனுமதியளிப்பதை மக்கள் தெரிந்து கொள்ளட்டும் என்பதற்காக அச்செயலை அண்ணலார் தாமே செய்தார்கள். அவ்வாறிருந்தும் சிலர் அந்தச் செயலைச் செய்திட முன் வரவில்லை. அம் மக்களின் இந்த மனப்பான்மை அண்ணலாருக்குத் தெரிய வந்தவுடன், அண்ணலார் உரையாற்றினார்கள். இறைவனைப் புகழ்ந்த பின் கூறினார்கள்:''நான் செய்கின்ற ஒரு செயலைச் செய்யாமல் சிலர் ஏன் விலகிக் கொள்கிறார்கள்? இறைவன் மீதும் ஆணையாக, நான் அவர்கள் அனைவரையும் விட அதிகமாக அல்லாஹ்வை அறிந்தவனாக இருக்கின்றேன். அவர்கள் அனைவரையும்விட அதிகமாக அவனுக்கு அஞ்சக்கூடியவனாகவும் இருக்கின்றேன்.'' (புகாரி முஸ்லிம்) (அண்ணல் நபிகளார் வாழ்வினிலே... நூலில் இருந்து)