அண்ணல் நபி (ஸல்) அவர்கள் ஹிரா எனும் மலைக் குகையில் இறை தியானத்தில் மூழ்கியிருந்தார்கள். அச்சமயத்தில்தான் இறைவன் அண்ணலாரைத் தன் தூதராகத் தேர்ந்தெடுத்தான். அதைத் தொடர்ந்து வானவர் தலைவர் ஜிப்ரீல் அவர் முன் தோன்றி இறைவனின் திருச்செய்தியை அருளினார். அச்சத்தால் உடல் நடுங்க, வேர்த்து விறுவிறுத்து அண்ணல் நபி (ஸல்) அவர்கள் வீடு திரும்பினார்கள். வீட்டிற்கு வந்ததும் அன்பு மனைவி கதீஜாவை அழைத்து நடந்ததையெல்லாம் கூறி, ‘‘என்னைப் போர்வையால் போர்த்துங்கள்; போர்வையால் போர்த்துங்கள்’’ என்றார்.
அப்பொழுது கதீஜா அவர்கள் தம் அன்புக் கணவருக்குக் கூறிய ஆறுதல் மொழிகள் இன்றும் வரலாற்று ஏடுகளில் பொன் எழுத்துகளால் பொறிக்கப்பட்டுள்ளன. அன்னை கதீஜா கூறினார்:
‘‘நீங்கள் ஏன் கவலைப்படுகிறீர்கள்? இறைவன் உங்களை ஒருபோதும் சிறுமைப்படுத்த மாட்டான். நீங்கள் யாருக்கும் எந்தத் தீங்கும் இழைத்ததில்லை. நீங்கள் நன்மையான செயல்களைச் செய்கிறீர்கள். தான, தர்மங்களை வழங்குகிறீர்கள். ஏழை, எளியவர்களுக்கு உதவுகிறீர்கள். அநாதைகளையும் விதவைகளையும் ஆதரிக்கிறீர்கள். விருந்தினரை உபசரிக்கிறீர்கள். மக்களின் இன்ப துன்பங்களில் பங்கு கொள்கிறீர்கள். உறவுகளைப் பேணி நடக்கிறீர்கள். துன்பமுற்றோருக்கு உதவி புரிகின்றீர்கள். இப்படியிருக்க, நீங்கள் ஏன் அஞ்சுகிறீர்கள்? தைரியமாக இருங்கள். இறைவன் உங்களை ஒருபோதும் கைவிடமாட்டான்.’’
அதன்பிறகு அண்ணலார் அச்சம் நீங்கி இறைவனின் செய்திகளை மக்களுக்கு எடுத்துரைக்கத் தொடங்கினார்கள். அன்னை கதீஜாவின் அழகிய நடைமுறை நமக்குப் பல படிப்பினைகளைத் தருகிறது. கணவருக்குத் துன்பம் ஏற்படும்போது ஒரு மனைவி எப்படிச் செயல்பட வேண்டும் என்பது முதல் பாடம். வெறுமனே ஆறுதல் வார்த்தைகள் கூறாமல், நல்ல கைதேர்ந்த ஒரு மனநல மருத்துவரைப் போல கணவனின் நற்பண்புகளையும் நற்செயல்களையும் எடுத்துக் கூறி, அவருக்கு ஆறுதல் அளிக்கிறார்.
பிரச்னைகளை மனைவியிடம் சொன்னால் ஆறுதல் கிடைக்கும் என்பது இரண்டாவது பாடம். இன்றைய கணவரும், மனைவியும் பெரிதும் கவனத்தில் கொள்ள
வேண்டிய செய்தியாகும் இது. எல்லாவற்றையும் விட முக்கியமான பாடம், மனைவி மனம் திறந்து பாராட்டும் அளவுக்குக் கணவனிடம் நல்ல பண்புகளும் நற்செயல்களும் மேலோங்கி இருக்க வேண்டும். சும்மா கிடைத்துவிடுமா மனைவியின் பாராட்டு? அதற்காக நாமும் ஏன் முயற்சி செய்யக் கூடாது?
இந்த வாரப் பிரார்த்தனை
‘எங்கள் இறைவனே! எங்கள் மனைவியரையும் எங்கள்
குழந்தைகளையும் எங்கள் கண்களுக்குக் குளிர்ச்சி அளிக்கக்கூடியவர்களாய் விளங்கச் செய்வாயாக. மேலும் எங்களை இறை அச்சமுடையவர்களுக்குத் தலைவர்களாய்த் திகழச் செய்வாயாக!’
(திருக்குர்ஆன் 25:74)
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 Response to "மனைவி பாராட்டும் கணவன்"
கருத்துரையிடுக