மனித வாழ்க்கையில் நட்பு மிக முக்கிய அங்கம் வகிக்கின்றது. உற்றார் உறவினரிடமும், உற்ற நண்பர்களிடமும், உயர் அதிகாரிகளிடமும், நட்பை வளர்த்துக் கொள்ள மிக முக்கியமானது 'இங்கிதம்'.
நமது பேச்சில், செயலில், பழக்க வழக்கங்களில் இங்கிதத்தைக் கடைப் பிடித்தால், நம்மீது பிறருக்குள்ள மதிப்பு உயரும். நல்ல நண்பர்களின் நட்பு கிடைக்கும். கிடைத்த நட்பு நிலைத்து நிற்கும். உறவினர்களின் நெருக்கம் அதிகமாகும். உறவுகள் பலப்படும். உயர் அதிகாரிகளின் இதயத்தில் இடம் பிடித்துக் காரியங்களை எளிதில் சாதித்துக் கொள்ள முடியும். இவை யாவும் உருப்படாத 'ராசிபலன்' வார்த்தைகள் அல்ல. உணர்ந்து அனுபவித்த உண்மைகள்.
அலுவலகம் ஒன்றின் மேலாளர் அறையின் நுழைவாயிலில், 'உத்திரவின்றி உள்ளே வரக் கூடாது' என எழுதி வைக்கப் பட்டிருந்தது. அந்த அலுவலகத்திற்குப் புதிதாக மாற்றலாகி வந்த மேலாளர், தம் உதவியாளரை அழைத்து அந்த அறிவிப்புப் பலகையை அகற்றும் படியும், அதற்குப் பதிலாக 'உத்திரவு பெற்று உள்ளே வரவும்' என எழுதி வைக்கும் படியும் கேட்டுக் கொண்டார்.இரு வாசகங்களின் கருத்தும் ஒன்று தான். முதல் வாசகத்தின் எதிர்மறை அணுகுமுறை சிலருக்கு எரிச்சலை ஏற்படுத்தும். இரண்டாம் வாசகத்தின் நேர்மறை அணுகுமுறை அனைவர் மனதிலும் அற்புதமான ஓர் ஈர்ப்பை ஏற்படுத்தும். இதுவும் ஓர் இங்கிதமே!.
ஒருவரைச் சந்திக்க நாம் செல்வதாக இருந்தால், அதுவும் ஏதேனும் ஒரு வகையில் அவர் நம்மை விட உயர்ந்தவராக இருந்தால், நமக்கு வசதிப்பட்ட நேரத்தில நாம் செல்லக் கூடாது. 'எந்த நேரத்தில் வந்தால் தங்களைச் சந்திக்கலாம்?' என்று அவரிடம் முன் கூட்டியே கேட்டறிந்து, நம்மால் அவருடைய வழக்கமான அலுவல்களுக்கு பாதிப்பு ஏற்படாவண்ணமும், அவருக்கு வசதிப்பட்ட நேரத்திலும் சந்திப்பை வைத்துக் கொள்ள வேண்டும். அப்போது தான் நம் மீது அவருக்கு ஓர் ஈர்ப்பு உண்டாகும். நம் காரியத்தைச் சாதித்துக் கொள்வதும் சுலபமாகும்.
பொதுவாக உறவினர்கள் நண்பர்களின் வீடுகளுக்கு நாம் தனியாகவோ அல்லது குடும்பத்துடனோ செல்ல நேர்ந்தால், நமது வருகையை முன் கூட்டியே அவர்களுக்குத் தெரிவித்து விட்டுச் செல்ல வேண்டும். சர்வ சாதாரணமாகத் தொலைபேசி உபயோகம் வந்து விட்ட இந்தக் காலகட்டத்தில் இது மிகவும் எளிது. தொலைபேசி வசதி இல்லாத இடங்களுக்கு கடிதம் மூலமாகவேனும் தெரிவித்து விட்டுச் செல்லவேண்டும். முன் அறிவிப்பின்றி திடீரெனப் போய்ச் சேருவது அவர்களுக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தும். ஒரு குறிப்பிட்ட நாளில் அல்லது நேரத்தில் அவர்கள் தம் சொந்த வேலையாக வெளியில் செல்லத் திட்டமிட்டிருக்கலாம். எதிர் பாரா விதமாக திடீரென நாம் போய் நிற்கும் போது அவர்களின் அவசியமான அலுவல்கள் திட்டங்கள் பாதிக்கப் படலாம். வீட்டுக்கு வரும் விருந்தினர்களை இன்முகத்துடன் வரவேற்று உபசரிக்கும் நற்குணம் கொண்டவர்களைக் கூட இது போன்ற திடீர் வருகை சில சமயம் எரிச்சல் படவைக்கும்.
தம் வீட்டை எப்போதும் தூய்மையாகவும், பொருட்களை ஒழுங்கு முறையுடன் அழகு படுத்தியும் வைத்திருப்பதைச் சிலர் விரும்புவர். ஆனாலும் விளையாட்டுக் குழந்தைகள் உள்ள வீடுகளில் பொருட்கள் சிதறிக் கிடக்கும். சிறு குழந்தைகள் உள்ள வீடுகளில் இது தவிர்க்க முடியாதது. இது போன்ற சந்தர்ப்பங்களில் முன் அறிவிப்பின்றி விருந்தினர் வந்து விட்டால் வீட்டில் உள்ளவர்கள் அவமானப்பட்டதைப் போல் உணருவார்கள்.அப்படி ஒரு தர்ம சங்கடத்தை நாம் அவர்களுக்கு ஏற்படுத்தக் கூடாது. எனவே விருந்தினராக நாம் எந்த வீட்டுக்குச் சென்றாலும் முதலில் அறிவித்து விட்டுச் செல்வது மிக முக்கியம். இதுவும் ஓர் இங்கிதம்.
எந்த வீட்டுக்குச் சென்றாலும் வீட்டாரின் அனுமதி கிடைத்த பின்னரே உள்ளே செல்ல வேண்டும். உள்ளே இருப்பவரோ அல்லது வெளியிலிருந்து நம்மை உள்ளே அழைத்துச் செல்பவரோ 'உள்ளே வாருங்கள்' என்று அழைக்கும் வரை நாமாக அவசரப்பட்டுச் செல்லக் கூடாது. நமது சொந்த வீட்டைத் தவிர வேறு எவர் வீட்டிலும் அவர் எவ்வளவு தான் நெருங்கிய உறவினராகவோ நண்பராகவோ இருப்பினும் அவர்கள் வீட்டில முழு உரிமை எடுத்துக் கொண்டு சமையலறை வரை சர்வ சாதாரணமாகச் செல்வதைத் தவிர்க்கவேண்டும். இது பல்வேறு பிரச்சினைகளுக்கு வழி வகுக்கும்.
விருந்தினராக அடுத்தவர் வீட்டுக்குச் சென்றால் வீட்டுக் காரர்களே சலிப்படையும் அளவுக்குத் தங்குவது கூடாது. முதல் நாள் உபசரிப்பு தடபுடலாக இருக்கும். அடுத்தடுத்த நாட்களில் வித்தியாசத்தை நாமே உணரலாம். எனவே பலமான உபசரிப்பு முடிந்ததுமே கௌரவமாக விடை பெற்றுக் கொள்ள வேண்டும். 'விருந்தும் மருந்தும் மூன்று நாள் தான்' என்று முன்னோர்கள் சும்மாவா சொன்னார்கள்?
விருந்தினராக அடுத்தவர் வீடுகளுக்குச் செல்லும் போது அவ்வீட்டில் சிறு குழந்தைகள் இருப்பின் நம்மால் இயன்ற அன்பளிப்புப் பொருட்களை, குறிப்பாக இனிப்புப் பண்டங்களை வாங்கிச் செல்வது சிறந்தது. அது ஒன்றிரண்டு மிட்டாய்களாகக் கூட இருக்கலாம். அவ்வீட்டின் குழந்தைகள் நமது வருகையால் மகிழ்ச்சி அடைவார்கள். ஒன்றுமே வாங்கமல் வெறுங்கையுடன் எப்போதும் ஒரு வீட்டிற்குச் செல்லும் வழக்கமுடைய ஒருவர் ஒரு முறைச் சென்ற போது கதவைத் திறந்த அவ்வீட்டுக் குழந்தை தனது தாயிடம் ஓடிச் சென்டறு 'ஒன்றுமே வாங்காமல் சும்மா வருமே அந்த மாமா வந்திருக்கிறது' என்று சப்தம் போட்டுச் சொல்ல, வந்தவர் வெட்கத்தால் கூனிக் குறுகிப் போயிருப்பார் என்பதைச் சொல்ல வேண்டியதில்லை.
இரண்டு நண்பர்கள் உரையாடிக் கொண்டிருக்கும் போது அவர்களுடன் நாமும் சேர்ந்துக் கொள்ள வேண்டிய சூழ் நிலை ஏற்பட்டால், நமது வருகையை அவ்விருவரும் அறிந்துக் கொள்ளும் விதத்தில் அறிவித்து விட்டு அவர்களுடன் இணைந்துக் கொள்ளவேண்டும். நமக்குத் தெரிவிக்க விரும்பாத இரகசியம் எதுவும் அவர்கள் பேசிக் கொண்டிருக்கலாம். அது வரை அவர்கள் பேசிக் கொண்டிருந்த தலைப்பை விட்டு வேறு தலைப்புக்கு அவர்கள் திடீரென மாறினால், அதைக் கொண்டு நாம் புரிந்துக் கொள்ளலாம். பிறகு சந்திப்பதாகச் சொல்லி விட்டு நாம் நாகரிகமாக நகர்ந்துக் கொள்வது தான் இங்கிதம்.
பலர் சேர்ந்து இருக்கும் இடத்தில் ஒருவரை மட்டும் தனியாக அழைத்துச் சென்று பேசுவதும், மற்றவர்களுக்குப் புரியாத மொழியில் ஒருவருடன் உரையாடுவதும் முறையற்ற செயல்.
பலருடன் சேர்ந்து அமர்ந்திருக்கும் போது நாம் அவசரமாகச் செல்ல நேரிட்டால், மற்றவர்களிடம் நமது அவசரத்தை அறிவித்து விட்டுத் தான் அந்த இடத்தை விட்டு நகர வேண்டும்.
நம்மால் செய்ய இயலாத ஒரு காரியத்தில் நமக்கு உதவும் நோக்கத்துடன் ஒருவர் வந்து உதவி செய்தால் முழு வேலையையும் அவர் தலையில் கட்டி விட்டு நாம் ஒதுங்கி விடக் கூடாது. அவருடன் கூடவே இருந்து சின்னஞ்சிறு ஒத்தாசைகளை செய்ய வேண்டும். அதுபோல் அவருடைய காரியங்களில் நம்மால் இயன்ற வரை நமது ஒத்துழைப்பை வழங்க வேண்டும்.
பிறருக்கு நாம் உதவி செய்யும் போது அது பிரதி பலன் எதிர்பாராத உதவியாக இருக்க வேண்டும். அதே சமயம் பிறர் நமக்காக உதவி செய்தால் நம்மால் இயன்ற பிரதி பலனை நாம் செலுத்த வேண்டும்.
நமக்காக ஒருவர் செலவு செய்தால் அதற்குச் சமமாகவோ அல்லது அதைவிட அதிகமாகவோ பிரிதொரு சமயத்தில் அவருக்காக நாம் செலவு செய்ய வேண்டும். அதை உடனுக்குடன் செய்தால் நாகரிகமாக இருக்காது. எனவே அதற்கான தருணத்தை எதிர் பார்த்து காத்திருக்க வேண்டும்.
நண்பர்கள் உறவினர்கள் யாராக இருந்தாலும் கொடுக்கல் வாங்கலில் மிகவும் நேர்மையாகவும் நாணயத்துடனும் நடந்துக் கொள்ள வேண்டும். அப்போது தான் நட்பும் உறவும் நீடிக்கும். மிகச் சாதாரணமாக நாம் நினைக்கும் சின்னஞ்சிறு கொடுக்கல் வாங்கல்கள் தான் நம்மைப் பற்றிய அபிப்பிராயத்தை பிறர் மனதில் பதிய வைக்கும்.
'ஒருவரை நல்லவர் என்று சொல்வதற்கு நீர் அவருடன் மூன்று விஷங்களில் சம்பந்தப் பட்டிருக்க வேண்டும். நீர் அவருடயை அண்டை வீட்டுக்காராக இருக்க வேண்டும், அல்லது நீண்ட தூரம் அவருடன் பயணம் செய்திருக்க வேண்டும், அல்லது அவருடன் கொடுக்கல் வாங்கல் நடத்தியிருக்க வேண்டும்' என்னும் ஒரு பேரறிஞரின் கூற்று மிகவும் கவனிக்கத் தக்கதாகும்.
பலர் சேர்ந்து அமர்ந்திருக்கும் போது பிறர் முகம் சுளிக்கும் படியான காரியங்களைச் செய்யக் கூடாது. தும்முதல் கொட்டாவி விடுதல் போன்ற இயற்கையான, நம்மால் கட்டுப் படுத்த முடியாத செயல்கள் ஏற்படும் போது பிறர் அருவருப்பு அடையாத வகையில் வேறு பக்கம் திரும்பிக் கொள்ள வேண்டும்.
நமது மிக நெருங்கிய நண்பராக இருந்தாலும், தனிப்பட்ட முறையில் அவருடன் மிகவும் இயல்பாகப் பேசும் பழக்கம் நமக்கு இருந்தாலும் கூட அவரை உயர்வாக மதிப்பவர்களிடம் குறிப்பாக அவரது மனைவி, குழந்தைகள், மற்றும் அவருக்குக் கீழ் பணிபுரியும் ஊழியர்கள் ஆகியோரிடம் அவரைப் பற்றி விசாரிக்கும் போது கண்ணியமான வார்த்தைகளைப் பயன் படுத்த வேண்டும்.
சிறு குழந்தைகள் செய்யும் சின்னஞ்சிறு செயல்களைக் கூட நாம் அங்கீகரித்து அவர்களைப் பாராட்ட வேண்டும். குழந்தை தவழ்வதற்கும், எழுந்து நிற்பதற்கும், நடப்பதற்கும் தன் முதல் முயற்சியைத் தொடங்கும் போது, அவர்களுக்குப் புரியும் விதத்தில் அவர்களுடைய மொழியாகிய புன்னகை மொழியில் நம் பாராட்டைத் தெரிவிக்க வேண்டும்.
படிக்கும் குழந்தைகள் அனைவரும் அறிவாற்றலிலும், நினைவாற்றலிலும் சமமாக இருப்பதில்லை. ஒரு குடும்பத்தில் உள்ள குழந்தைகளில் ஆற்றலில் ஒருவருக் கொருவர் வித்தியாசப் படுவதுண்டு. நன்றாகப் படிக்கும் குழந்தைகளைப் பாராட்டும் அதே சமயம், குறைவான மதிப் பெரும் குழந்தையை மற்ற குழந்தைகளுக்கு முன்னால் வைத்து மட்டம் தட்டக் கூடாது. தனிப்பட்ட முறையில் அக் குழந்தையின் படிப்பில் நாம் கவனம் செலுத்த வேண்டும்.இந்த ஆலோசனைகள் பெற்றோர் அந்தஸ்தில் இருப்பவர்களுக்கு மட்டுமல்ல ஆசிரியர் அந்தஸ்தில் இருப்பவர்களுக்கும் பொருந்தும்.
ஒரு குடும்பத்தில் பல குழந்தைகள் இருக்கும் போது ஒரு குழந்தைக்கு மட்டும் தனியாக எதுவும் வாங்கிக் கொடுப்பதோ, அதிக சலுகைகள் கொடுப்பதோ கூடாது. அது மற்ற குழந்தைகளுக்கு தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்தும்.
தொலை தூரத்தில் இருப்பவர்கள் தம் உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் தொலைபேசி மூலம் தொடர்பு கொள்ளும் போது, தவிர்க்கவே முடியாத அவசியம் ஏற்பட்டாலன்றி, அயர்ந்து உறங்கிக் கொண்டிருக்கும் நள்ளிரவு நேரங்களில் தொடர்பு கொள்ளக் கூடாது. சொந்தக் குடும்பத்தினருக்காயினும் சரியே. அகால நேரங்களில் ஒலிக்கும் தொலைபேசி ஒலி பலருடைய உறக்கத்தை கெடுப்பது மட்டுமல்ல, சிலருக்கு திடுக்கத்தையும் திகிலையும் ஏற்படுத்தும்.
தொலைபேசி மூலம் தொடர்பு கொள்ளும் போது முதலில் நாம் யாருடன் தொடர்புக் கொள்ள வேண்டுமோ அவர்தான் தொடர்பில் வந்திருக்கிறாரா? என்பதை நன்றாக உறுதிப்படுத்திக் கொண்டு தான் பேசத் தொடங்க வேண்டும். உரையாடலைத் தொடங்கும் போது அழகிய முகமன் கூறி, நலம் விசாரித்த பின்னர் தான் சொல்ல வந்த செய்திகளையோ கேட்க வந்த விபரங்களையோ தொடங்க வேண்டும்.
தொலைபேசியில் முடிந்தவரை சுருக்கமாகப் பேச வேண்டும். விரிவாகப் பேச வேண்டிய அவசியம் ஏற்படும் போது மறுமுனையில் இருப்பவரிடம் முன் கூட்டியே தெரிவித்து அவர் அதற்கேற்ற சூழ்நிலையில் இருக்கின்றாரா என்பதை கேட்டறிந்துக் கொண்டு நமது உரையாடலைத் தொடரலாம். பேசிக் கொண்டிருக்கும் போது மறுமுனையில் இருப்பவர் நமது பேச்சில் கவனம் செலுத்தாமல் 'சரி வேறு எதுவும் செய்தி உண்டா?' என்று கேட்க ஆரம்பித்து விட்டாலே, அவர் ஏதோ அவசரத்தில் இருக்கிறார் என்பதைப் புரிந்துக் கொண்டு நமது பேச்சை முடித்துக் கொள்ள வேண்டும்.
பேசிக் கொண்டிருக்கும் போது தொலைத் தொடர்பு கோளாறு காரணமாகத் தொடர்பு திடீரெனத் துண்டிக்கப் பட்டுவிட்டால் மறுபடியும் தொடர்புக் கொண்டு வருத்தம் தெரிவித்தபின் உரையாடலைத் தொடரவேண்டும்.
மரணம் போன்ற துக்கம் ஏற்பட்ட இடங்களுக்குச் சென்றால், அங்கு அமர்ந்துக் கொண்டு ஊர்க் கதைகள் பேசுவதும், சிரித்துப் பேசி குதூகலிப்பதும் கூடாது. மரண துக்கத்தில் இருப்பவர்களின் மன வேதனையைப் புரிந்து நடந்துக் கொள்ள வேண்டும்.
புதிதாக அறிமுகம் ஆகும் நபர்களிடம் நம்மைப் பற்றியும் நமது குடும்பத்தைப் பற்றியும் சுய புராணம் பாடிக் கொண்டிருக்கக் கூடாது. அது தேவையற்ற பல பிரச்சினைகளுக்கு வழி வகுக்கும்.
பலருடன் சேர்ந்திருக்கும் போது நாம் மட்டுமே பேசிக் கொண்டிருக்கக் கூடாது. மற்றவர்கள் பேசவும் வாய்ப்பளிக்க வேண்டும். மற்றவர்கள் பேசுவதையும் செவி தாழ்த்திக் கேட்க வேண்டும். அப்போது தான் மற்றவர்களுக்கும் நம் பேச்சைக் கேட்பதற்கு ஆர்வம் பிறக்கும்.
பிரபலப் பேச்சாளர் வரும் வரை சிறிது நேரம் பொது மேடைகளில் பேச வாய்ப்பு கிடைத்தால், சுருக்கமாகப் பேச வேண்டும். எவ்வளவு தான் நாம் அருமையாகப் பேசினாலும் பிரபலப் பேச்சாளரின் உரைக்காகக் காத்திருப்பவர்களுக்கு நமது பேச்சு 'அறுவையாக'த் தான் தெரியும். இன்னும் கொஞ்ச நேரம் இவர் பேசமாட்டாரா? என மற்றவர்கள் எதிர்பார்க்கும் போது நம் உரையை முடித்துக் கொள்ள வேண்டும்.
இங்கிதத்தைப் பற்றி இன்னும் நிறைய எழுதலாம். படிப்பவர்களுக்கு சலிப்பு ஏற்படும் என்பதால் இத்துடன் நிறுத்திக் கொள்வது நல்லது. இதுவும் ஓர் இங்கிதமே!
------------------------------------
அப்துஸ்ஸலாம் மஸ்தூக்கா
அப்துஸ்ஸலாம் மஸ்தூக்கா
0 Response to "இங்கிதம் வேண்டும்"
கருத்துரையிடுக